Archives: நவம்பர் 2018

தேவன் இங்கே இருக்கிறார்

எங்கள் வீட்டில் “அழைக்கப்பட்டாரோ அழைக்கப்படவில்லையோ, தேவன் இங்கே இருக்கிறார்” என்ற வாசகப் பலகை உண்டு. “ஏற்றுக்கொள்கிறீர்களோ, ஏற்றுக்கொள்ளவில்லையோ தேவன் இங்கே இருக்கிறார்” என்பது அதன் புது வாசகமாக இருக்கலாம்.

எட்டாம் நூற்றாண்டின் பின்பகுதியில் (கி.மு. 755-715) வாழ்ந்த பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா இதை ஒத்த வார்த்தைகளை எபிரேய ஜனங்களுக்கு எழுதினார். அவர்கள் தேவனை மறந்துவிட்டதால் (ஓசியா 4;1), தேவனை “தொடர்ந்து” அறியும்படி அவர் இஸ்ரவேலர்களை ஊக்கப்படுத்தினார் (ஓசியா 6:3). தேவனின் பிரசன்னத்தை ஜனங்கள் மறந்ததால், அவர்கள் அவரை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தனர் (6:12). அதன்பின் அவர்களுடைய சிந்தனைகளில் தேவனுக்கு இடமே இல்லாமல் போயிற்று (சங். 10:4).

நம்முடைய சந்தோஷத்திலும், நம்முடைய பாடுகளிலும் தேவன் நம் அருகே இருக்கிறார், நம்மில் கிரியை செய்கிறார் என்பதை “கர்த்தரை அறியுங்கள்” என்ற ஓசியாவின் எளிய ஆனால் ஆக்கபூர்வ வார்த்தைகள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.

தேவனை அங்கீகரிப்பது என்பது அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கும்போது தேவன் நமக்கு ஞானத்தைத் தந்து, நம் வேலையை குறித்த பண ஒதுக்கீட்டில், குறித்த நேரத்தில் முடிக்க உதவினார் என்று நினைப்பதாகும். நாம் விரும்பிய வீடு கிடைக்காதபோதும் தேவனை அங்கீகரிப்பது அந்த சூழ்நிலையை நமக்கு நன்மையானதாக மாற்றித் தருவார் என்று நம்புவதாகும்.

நாம் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காதபோதும், நம்முடைய ஏமாற்றத்திலும் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அங்கீகரிப்பது, அவருடைய பிரசன்னத்தில் ஆறுதல் பெற உதவும். நாம் உணவை ரசித்து சாப்பிடும்போது, தேவனை அங்கீகரிப்பது, தேவன் நமக்கு சமைப்பதற்குத் தேவையான பொருள்களைக் கொடுத்ததோடு, சமைப்பதற்கு இடத்தையும் கொடுத்திருக்கிறார் என்று நினைவுகூர உதவும்.

தேவனை நாம் அங்கீகரிப்பது, நம் வாழ்க்கையில் சிறிய விஷயத்திலும், பெரிய விஷயத்திலும், வெற்றியிலும், துக்கத்திலும் தேவனின் பிரசன்னத்தை நினைவுகூருவதாகும்.

அமைதியான சாட்சி

நற்செய்தி பிரசங்கிப்பது தடை செய்யப்பட்டுள்ள, கட்டுப்பாடுகள் நிறைந்த நாட்டில் ஏமி வசிக்கிறாள். பிறந்த குழந்தைகளைப் பராமரிக்கும் செவிலியாக ஒரு பெரிய மருத்துவமனையில் பணிபுரிகிறாள். அவள் தன்னுடைய பணியை சிறப்பாகவும், அர்ப்பணிப்போடும் செய்வதால் அவள் தனித்துத் தெரிவாள். இதனால் பல பெண்கள் அவளைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக, தனிமையில் அவளிடம் பல கேள்விகள் கேட்பார்கள். அப்போது ஏமி தன் இரட்சகரைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்வாள்.

அவளுக்கிருக்கும் நல்ல பெயரைப் பார்த்து பொறாமை கொண்ட உடன் பணியாளர்கள், அவள் சில மருந்துகளைத் திருடியதாக குற்றம் சாட்டினார்கள். அவளது மேலதிகாரிகள் அந்தக் குற்றச்சாட்டுகளை நம்பவில்லை. இறுதியில் யார் திருடியது என்று கண்டுபிடித்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு ஏமியின் விசுவாசம் குறித்து அவளுடன் பணியாற்றும் செவிலியர்கள் அவளிடம் கேட்டார்கள். ஏமியின் அனுபவம், பேதுரு சொன்னதை எனக்கு நினைவுபடுத்தியது: “பிரியமானவர்களே, புறஜாதிகள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றின் நிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடத்தையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்” (1 பேது. 2:11-12).

தேவன் நம்மில் கிரியை செய்ய நாம் அனுமதிக்கும்போது, வீட்டில், பணித்தளத்தில் அல்லது பள்ளியில் நம் செயல்கள் மற்றவர்கள்மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் எப்படிப் பேசுகிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை கவனிக்கும் மனிதர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கிறார்கள். நம்முடைய எண்ணங்களையும், செயல்களையும் தேவன் ஆட்கொள்ளும் விதமாக அவரை சார்ந்திருப்போமாக. அதன் விளைவாக விசுவாசம் இல்லாதவர்களை நாம் இயேசுவிடம் வழிநடத்தலாம்.

தொடர்ந்து உதவுபவர்

தண்டுவடத்தில் ஏற்பட்ட பலத்த காயத்தின் காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மார்டி, மீண்டும் கல்லூரியில் சேர்ந்து மேலாண்மை பட்டம் (MBA) பெற விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற அவன் அம்மா ஜூடி உறுதுணையாக இருந்தார். ஒவ்வொரு வகுப்பிலும், பாட கலந்துரையாடல் குழுவிலும் அவனுடனேயே இருந்து அவனுக்காக அவன் அம்மா குறிப்புகள் எடுத்தார். அவன் பட்டம் பெறும்போது மேடைக்கு ஏறுவதில்கூட உதவினார். மார்டிக்கு முடியாததாகத் தோன்றிய காரியம் அவன் அம்மா தொடர்ந்து செய்த உதவியால் சாத்தியமாயிற்று.

இந்த உலகை விட்டுப் போனபிறகு தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு இதேபோன்ற உதவி தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். அவர்களை விட்டுப் பிரிவதைப் பற்றி முன்பே கூறிய அவர், பரிசுத்த ஆவியானவர்மூலமாக தேவனுடன் புதிய உறவைப் பெறுவார்கள் என்று கூறினார். இந்த ஆவியானவர் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடன் இருந்து உதவுபவர். ஆசிரியரும் வழிகாட்டியுமான அவர், அவர்களோடு இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்குள்ளும் வாசம் செய்வார் (யோவா. 14: 17, 26).

நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள இயேசுவின் சீஷர்கள் பிரிந்து சென்றபோது தங்களால் கையாள முடியாத காரியங்களை தாங்கிக்கொள்ள, பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு தேவனின் உதவியைப் பெற்றுத்தந்தார். போராட்டம் மிகுந்த தருணங்களில், இயேசு சொன்னதை ஆவியானவர் அவர்களுக்கு நினைவுபடுத்துவார் (வச. 26): உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக....நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்...நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.

உங்கள் பெலனையும், திறனையும் மீறிய விஷயங்களை நீங்கள் எதிர்கொள்ளுகிறீர்களா? ஆவியானவரின் தொடர்ந்த உதவியை நீங்கள் சார்ந்திருக்கலாம். உங்களில் கிரியை செய்யும் பரிசுத்த ஆவியானவர் தேவனை மகிமைப்படுத்துவார்.

ஒரு தாயின் அன்பு

சூ சிறுமியாக இருந்தபோது, அவள் பெற்றோர் விவாகரத்து செய்தார்கள். அவள் யார் பாதுகாப்பில் இருப்பது என்பதில் சட்டச் சிக்கல்கள் எழுந்ததால், சில காலம் அவள் ஒரு சிறுவர் இல்லத்தில் தங்க நேர்ந்தது. வயதில் பெரிய சிறுவர்கள் அவளைக் கேலி செய்து, துன்புறுத்தியபோது, தனிமையாக, கைவிடப்பட்டதாக உணர்ந்தாள். அவள் தாய் அவளை மாதம் ஒரு முறை மட்டுமே வந்து பார்த்தாள். அவள் தந்தையை வெகு அரிதாகவே பார்த்தாள். ஆனால் அந்த இல்லத்தின் விதிகளின்படி அவள் அடிக்கடி வந்து தன் மகளைப் பார்க்கமுடியாது என்ற விவரமும், சூ கண்ணில் தென்படுகிறாளா என்று பார்க்க அவள் தாய் தினமும் மதில் சுவர் அருகே நின்ற விவரமும் பல வருடங்கள் கழித்துத்தான் அவள் தாய் சொல்லி சூ தெரிந்துகொண்டாள். “நீ நன்றாக இருக்கிறாயா என்று தெரிந்துகொள்ள வெளியே நிற்பேன். சில சமயம் நீ தோட்டத்தில் விளையாடுவதைப் பார்ப்பேன்,” என்று அவள் தாய் தெரிவித்தாள்.

சூ இதை என்னுடன் பகிர்ந்துகொண்டபோது, தேவனின் அன்பை எனக்கு அது புரியவைத்தது. நம்முடைய போராட்டங்கள் நடுவே சில சமயம் நாமும் தனிமையாக, கைவிடப்பட்டவர்களாக உணர்கிறோம். ஆனால் தேவன் எப்போதும் நம்மைக் கண்காணிக்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம் (சங். 33:18). நம்மால் அவரைப் பார்க்க முடியாது என்றாலும், அவர் நம் அருகே இருக்கிறார். நாம் எங்கே சென்றாலும், அன்பான பெற்றோரைப்போல அவரது கண்களும், இருதயமும் நம்மை கவனிக்கின்றன. ஆனால், சூவின் தாயைப்போல அல்லாமல், நமக்காக எந்த நேரமும் அவர் உதவ முடியும்.

தேவன் தம் பிள்ளைகளைத் தப்புவிப்பதையும், காப்பாற்றுவதையும், கனப்படுத்துவதையும் பற்றி சங்கீதம் 91 கூறுகிறது. அவர் ஒரு புகலிடத்திற்கும் மேலானவர். வாழ்கையின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நாம் பயணப்படும்போது. வல்லமையான தேவன் நம் வாழ்வில் செயல்படுகிறார், நம்மைக் கண்காணிக்கிறார் என்ற உண்மையில் நாம் ஆறுதல் அடையலாம். “(உனக்கு) மறு உத்தரவு அருளிச்செய்வேன்” என்று கூறுகிறார். “ஆபத்தில் உன்னோடிருந்து, உன்னைத் தப்புவிப்பேன்” (வச. 15).

நம்மிடம் இருப்பது

ஒரு பண்டிகைக் கால விடுமுறையைக் கொண்டாட தன்னுடைய குடும்ப உறுப்பினர்களையும், நண்பர்களையும் தன் வீட்டுக்கு அழைக்க என்னுடைய தோழி ஆர்வமாக இருந்தாள். விருந்தினர்களும் ஒன்றுகூடுவதை ஆர்வமாக எதிர்பார்த்தார்கள். அதிக பேருக்கு உணவளிக்க வேண்டும் என்பதால் உணவுக்கு தங்கள் பங்களிப்பைச் செலுத்த விரும்பினார்கள். சிலர் ரொட்டி கொண்டுவந்தார்கள். சிலர் சாலட்டுக்கான பச்சைக் காய்கனிகளையும், கூட்டு வகைகளையும் இனிப்பு கொண்டுவந்தார்கள். ஆனால், ஒரு விருந்தினருக்கு அதிக பணத்தட்டுப்பாடு இருந்ததால் அவளால் எந்த உணவுப் பொருளும் வாங்கி வர முடியவில்லை. எனவே தன் பங்களிப்பாக என் தோழியின் வீட்டை சுத்தம் செய்ய முன்வந்தாள்.

அவள் எந்த உணவுப் பதார்த்தமும் கொண்டு வரவில்லை என்றாலும், அவளுக்கு பந்தியில் சமமான இடமே கிடைத்திருக்கும். ஆனாலும் தன்னால் முடிந்த தன் நேரத்தையும், தன் திறமையையும் கொடுக்க விரும்பினாள். தன் பங்களிப்பை முழுமனதோடு செய்தாள். 2 கொரிந்தியர் 8ல் உள்ள பவுலின் வார்த்தைகளின் சாராம்சமும் இதுவே. உடன் விசுவாசிகளுக்குக் கொடுத்து உதவ அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர்கள் முயற்சியில் நிலைத்திருக்கும்படி பவுல் அவர்களுக்கு வலியுறுத்தினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும், மன விருப்பத்தையும் பாராட்டினார். கொடுப்பதற்கு அவர்களுக்கு இருந்த ஊக்கமே, வெகுமதி எந்த அளவானத், தொகையாக இருந்தாலும் ஏற்புடையதாக்கும் என்று கூறினார் (வச. 12).

அனேக முறை நாம் கொடுப்பதை மற்றவர்கள் கொடுப்பதோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். குறிப்பாக நாம் கொடுக்க நினைக்கும் அளவிற்கு நம்முடைய நிதி நிலை இடமளிக்காதபோது ஒப்பிடுகிறோம். ஆனால் நாம் கொடுப்பதைத் தேவன் வேறு விதமாகப் பார்க்கிறார். நமக்கு இருப்பதில் நாம் மனம் உவந்து கொடுப்பதை அவர் விரும்புகிறார்.